திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.32 திருவிடைமருதூர் பண் - தக்கராகம் |
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்
தீடாவுறை கின்ற இடைமரு தீதோ.
|
1 |
தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.
|
2 |
வெண்கோவணங் கொண்டடொரு வெண்டலை யேந்தி
அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ.
|
3 |
அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தையுறை கின்ற இடைமரு தீதோ.
|
4 |
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
ஈசனுறை கின்ற இடைமரு தீதோ.
|
5 |
வன்புற்றிள நாகம் அசைத் தழகாக
என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ.
|
6 |
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ.
|
7 |
பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த
ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த
ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.
|
8 |
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ.
|
9 |
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.
|
10 |
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி |
தோடொர் காதினன், பாடு மறையினன்
காடு பேணிநின், றாடு மருதனே.
|
1 |
கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.
|
2 |
எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.
|
3 |
விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.
|
4 |
பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.
|
5 |
கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.
|
6 |
பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.
|
7 |
எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.
|
8 |
இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.
|
9 |
நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.
|
10 |
கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.110 திருவிடைமருதூர் பண் - வியாழக்குறிஞ்சி |
மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.
|
1 |
தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.
|
2 |
படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.
|
3 |
பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.
|
4 |
பொழிலவன் புயலவன் புயலியக்குந்
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.
|
5 |
நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.
|
6 |
நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.
|
7 |
தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.
|
8 |
பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.
|
9 |
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.
(*) ஓத்து என்பது வேதம்.
|
10 |
இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோங்குவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.121 திருவிடைமருதூர் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி |
நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.
|
1 |
மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடைமிடை மருதே.
|
2 |
அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையும் உடையணல் இடைமிடை மருதே.
|
3 |
பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடைமிடை மருதே.
|
4 |
வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையினை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடைமிடை மருதே.
|
5 |
கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விடையுடை அணிகலன் இலனென மழுவினொ
டிலையுடை படையவன் இடைமிடை மருதே.
|
6 |
வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.
|
7 |
மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடைமிடை மருதே.
|
8 |
மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதடை யகலமொ டிகலின ரினதெனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடைமிடை மருதே.
|
9 |
துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.
|
10 |
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.122 திருவிடைமருதூர் - திருவிராகம் பண் - வியாழக்குறிஞ்சி |
விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.
|
1 |
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.
|
2 |
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே.
|
3 |
விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
உடையவர் அடியினை தொழுவதெம் உயர்வே.
|
4 |
உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.
|
5 |
ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை அடிகள தறைகழல்
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.
|
6 |
கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடமிடை மருதே.
|
7 |
செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.
|
8 |
அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.
|
9 |
குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.
|
10 |
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |